கட்டுரை

பத்து ஆண்டு பரிதவிப்பு: பிரதமர் அலுவலக ரகசியங்கள்

செங்குட்டுவன் தம்பி

சினிமா கிசுகிசுக்களை விட அரசியல் கிசுகிசுக்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் எண்ணிலடங்கா அரசியல் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவற்றை எழுத்தில் பதிவு செய்ய முடியாது. எழுதினால் தகவல் தந்தவரே மறுத்து விடுவார்.

அதிகார மையத்திற்கு அருகில் இருந்தவர்கள் பலரது எழுத்துக்கள் போலி ஹீரோயிஸம் நிரம்பியதாகவோ, உப்பு சப்பில்லாததாகவோ இருக்கும். முன்பு பிரதமருக்கு மீடியா அட்வைசராக இருந்த குல்தீப் நாயரின் எழுத்து விதிவிலக்கு.

2004 லிருந்து 2008 வரை பிரதமர் மன்மோகன் சிங்கின் மீடியா அட்வைசராக இருந்த சஞ்சயா பாரு (Sanjaya Baru) வின் ’  ’  The Accidental Prime Minister ’ ’ புத்தகம் மத்திய அரசின் அந்தரங்கங்களை நம்முன் காட்சிப்படுத்துகிறது.

ஆகஸ்ட் 2004 ல் , பிரதமர் மன்மோகன் சிங் முதல்முதலாக செங்கோட்டையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா என்று சஞ்சயாவை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் அழைத்தனர். அவரும் ஒப்புக்கொண்டார். பிரதமர் வீட்டிலிருந்து ஆரம்பித்து காந்தி மற்றும் நேரு குடும்பத்தினரின் சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பிரதமர் உரையாற்றப் போகும் மேடையில் நாற்பது நிமிடங்கள் இருந்து விட்டு அங்கே விருந்தினர்களுக்கான சேர்களை பார்வையிட்டார் சஞ்சயா. ஒவ்வொரு சேரிலும் அதில் அமர்பவர்களின் பெயர் அட்டைகள் இருந்தன. மேடைக்கு அருகிலிருந்த முதல் சேர் பிரதமரின் மனைவிக்கு, அதற்கு அடுத்த சேர்கள் முக்கியமான கேபினட் அமைச்சர் களுக்கு , பின் எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று சென்றது வரிசை. முதல் வரிசையில் சோனியா காந்திக்கு இடமில்லை. விதிமுறைப்படி பாதுகாப்பு அமைச்சகம் யார் எங்கே இருக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தது. உடன் வந்திருந்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரியிடம் சோனியா காந்திக்கு எங்கே இடம் என்று வினவ நான்காவது ( அ ) ஐந்தாவது வரிசையில் மேல் சபையின் துணைத்தலைவர் நஜ்மா ஹெப்துல்லா அருகே உள்ள இருக்கையை சுட்டிக் காட்டினார்.

சோனியாவிற்கு முதல் வரிசையில் இடமில்லையென்றால் பிரதமருக்கு தர்மசங்கடம்.  என்ன செய்வதென்று குழம்பிய சஞ்சயாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் நிகழ்வுகளில் சோனியா முன் வரிசையில் அமர்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. குடியரசு மாளிகையில் வெறும் எம்.பி யாக இருக்கும் போதே எப்படி முதல் வரிசையில் இடம் ஒதுக்கி னார்கள் என்று விசாரிக்கப்பட்டது. சங்கர் தயாள் சர்மா குடியரசு தலைவராக இருக்கும் போது கொண்டுவரப்பட்ட நடைமுறை திருத்தம் மூலம், முன்னாள் பிரதமருக்கான மரியாதை அவரது மனைவிக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முன்மாதிரியைப் பயன்படுத்தி 2004 சுதந்திர  தினவிழாவில் சோனியாவிற்கு முதல் வரிசை இருக்கையை ஏற்பாடு செய்த சஞ்சயா பிரதமரின் தர்மசங்கடத்தைத் தவிர்த்தார்.

பிரதமருக்கும் சோனியாவிற்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றங்கள், பல இடங்களில் விரிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் அலுவலக அதிகாரி புலோக் சேட்டர்ஜி (Pulok Chatterjee) அடிக்கடி சோனியாவை சந்தித்து கொள்கை முடிவுகள் பற்றிய விபரங்களைக் கூறி ஆலோசனை பெறுவதுண்டு. சோனியாவின் எண்ணங்கள் அகமது பட்டேல் வழியாக பிரதமரை வந்தடையும். பிரதமரின் வீட்டுப்பக்கம் அகமது பட்டேலின் நடமாட்டம் அதிகம் தென்பட்டால் மந்திரிசபையில் மாற்றம் ஏற்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமென்கிறார் சஞ்சயா. புத்தகத்தின் பல பக்கங் கள் இந்த பரிமாற்றங்களுக்கு இடையே நிகழும் பிரச்னைகளை சுவைபட விவரிக்கிறது, ஒரு பத்திரிகையாளனின் நடையில்.

மு.கருணாநிதி, சரத்பவார்  மற்றும் லாலு பிரசாத் யாதவ் என்று கூட்டணி தலைவர்களுடன் பிரதமர் சிங் நல்லுறவுடன் ஆட்சியை நகர்த்தினார். மே 11 , 2007 அன்று சென்னையில் மு.கவின் சட்டசபைப் பொன் விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் சிங்கிடம் தயாநிதி மாறனின் தொலைதொடர்பு துறையை ஆ.ராசாவிடம் கொடுக்க வேண்டுமென்று கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். 13 ஆம் தேதி, ஆ.ராசா தொலை தொடர்பு அமைச்சரானார்.

ஒரு நாள் காலை பிரதமர் வீட்டிற்கு சரத்பவார் ஒரு குற்றச்சாட்டுடன்  வந்தார். சரத்பவாருக்கு எதிரான சில செய்திகள் தேசிய மற்றும், மராத்தி பத்திரிகைகளில் வெளியானது என்றும் இதற்கு பின்னால் பிரதமர் அலுவலகம் இருப்பதாகச் சொல்லப்பட்டது என்று கூறி, இது ஏன் எதற்காக என்று பவார் கோபப்பட, புரியாமல்  விழித்தார் பிரதமர். பின் பவாரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, யார் அந்த கருப்பு ஆடென்று விசாரிக்க சஞ்சயாவிற்கு உத்தரவிட்டார். விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்ட பெயர் மத்திய அமைச்சர் ‘பிருதிவிராஜ் சவான் ’. பவாருக்கும் காங்கிரஸ் தலைமைக்குமுள்ள உட்பகையும், பிருதிவிராஜ் சவானுக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்குமான நெருக்கமும் அறிந்த பிரதமரின் நிலைமையை வாசிப்பவர்களின் கற்பனையின் முன் வைக்கிறார் சஞ்சயா.

மரணத்திற்குபின்னும் தில்லி அரசியல் சிலரை விடுவதில்லை என்பதை சஞ்சயா முன் வைக்கும் சில சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தில்லி மோதிலால் நேரு மார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு பிரதமர் சிங் வருகிறார், கூடவே வந்த சஞ்சயாவிடம்  அகமது பட்டேல் ஒரு வேலையை ஒப்படைக்கிறார். யமுனைக் கரையில் மகாத்மா காந்தி, நேரு , இந்திரா , ராஜீவ் , சஞ்சய் காந்தி சமாதிக்கருகில் நரசிம்மராவிற்கு சமாதி எழுப்ப வேண்டுமென்று அவரது வாரிசுகள் கோரிக்கை வைத்திருந்தனர். இது வேண்டாமென்று கூறி அவரது பூத உடலை ஐதராபாத்திற்கு எடுத்துச் செல்ல சம்மதிக்க வைக்கும் பணி அது. கொடுத்த வேலையைச் செய்யாமல் சஞ்சயா நழுவி விட ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் சிவராஜ் பட்டீல் அந்த வேலையை நிறைவேற்றுகின்றனர்.

2007-ல் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் காலமானதும் ஹரியானாவில் உள்ள அவரது தோட்டத்திற்கு உடலை கொண்டு சென்று இறுதிச்சடங்குகளை முடிக்க குடும்பத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. யமுனைக் கரையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும் இல்லையென்றால் தில்லியில் உள்ள லோடி பொது மின் மயானத்தில் இறுதி காரியத்தை முடித்துவிடுவேன் என்று சந்திரசேகரின் மகன் மிரட்ட அரசு பணிந்தது.

‘இந்த புத்தகத்தை எழுதியதின் மூலம் சஞ்சயா பிரதமரின் முதுகில் குத்திவிட்டார்’ என்பது பிரதமரின் மகளான உபிந்தர் சிங்கின் குற்றச்சாட்டு. உபிந்தர் சிங் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார்.

புத்தக வெளியீட்டிற்குப் பின் பேசிய சஞ்சயா ‘சோனியா காந்தி தான் சூப்பர் பிரதம மந்திரி. இதில் எந்த ரகசியமும் இல்லை’ என்று கூறியதாக பத்திரிகையில் செய்தி  வெளியானது. இதற்கு அமேதியில் பதிலளித்து பேசிய பிரியங்கா காந்தி ,‘மன்மோகன் சிங்ஜி தான் சூப்பர் பிரதம மந்திரி ’ என்றார்.

இந்த புத்தகத்தை வன்மையாக கண்டித்துள்ள பிரதமர் அலுவலகம்,  தனக்குக் கிடைத்த மேல்மட்டப் பதவியையும் தகவல்களையும் சஞ்சயா தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று கூறுகிறது.

‘மேற்கு உலகத்தில் இது மாதிரியான புத்தகங்கள் எழுதப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த புத்தகத்தின் ஆசிரியர் தேசிய ரகசியங்களையோ , தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் தகவல்களையோ எழுதவில்லை’ என்று ஆதரவாகத் தலையங்கம் எழுதியுள்ளது த ஹிந்து நாளிதழ். அத்துடன் சஞ்சயாவை பழிதீர்க்க தன் பக்க கதையை விளக்கி ஒரு புத்தகம் எழுதுமாறு டாக்டர். மன்மோகன் சிங்கையும் அறிவுறுத்துகிறது.

புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பிரதமருக்கும் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கும் இடையே நடந்த தகராறு சம்பந்தப்பட்டது.

எப்போதும் பிரதமர் சிங்கிற்கு எதிராக களமாடிக்கொண்டிருந்த அமைச்சர் அர்ஜூன் சிங்கை 2006 ல் நடந்த மந்திரி சபை மாற்றத்தை ஒட்டி வெளியேற்ற விரும்பினார் பிரதமர். அப்போது சஞ்சயா மன்மோகன் சிங்கிடம் ஒரு விஷயம் சொல்கிறார். ஏற்கெனவே நரசிம்மராவுக்கும்

சோனியா ஆதரவாளரான அர்ஜுன் சிங் குடைச்சல் கொடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அப்போது நரசிம்மராவுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்த சஞ்சயா, அர்ஜூன் சிங்கை ஏன் நீங்கள் வெளியேற்றக்கூடாது என்று கேட்டாராம்.  அதற்கு ராவ் , ‘ அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு அவரது உளவுத் துறை தலைவரான ஜே. எட்காரால் பிரச்னை இருந்தாலும் அவரை அதிபர் வெளியேற்றவில்லை. ஏன் என்று அதிபரிடம் கேட்டதற்கு , கூடாரத்திற்கு வெளியே இருந்து உள்ளுக்கு ‘உச்சா’ அடிப்பதை விட, உள்ளிருந்து வெளியே உச்சா அடிப்பது  பரவாயில்லை’, என்றார். இதே காரணத்தால்தான் நானும் அர்ஜுன்சிங்கை வெளியேற்றவில்லை” என்றாராம்.

இந்த சம்பவத்தை சஞ்சயா கூற பிரதமர் சிரித்து விட்டு அர்ஜூன் சிங் விவகாரத்தை விட்டுவிட்டாராம்.  

இந்திய அமைச்சர்களது பதவிகள் எப்படியெல்லாம் பிழைக்கின்றன பாருங்களேன்!

மே, 2014.